காலத்தின் கதவு திறக்கும் போது
சென்னை – 2025.
மாலை ஐந்து மணி. வானம் கருமையாக இருந்தது. மழை தொடர்ச்சியாக பெய்துக் கொண்டிருந்தது. மெட்ரோ ரயிலின் பாதையில் தண்ணீர் வழிந்தது. ஆற்றின் நீர் கரையைத் தாண்டிப் பாய்ந்தது. எங்கும் மக்கள் அவசரமாக ஓடிக்கொண்டிருந்தார்கள்.
ஆனால், ஒரு மூலையில் – அச்சத்தையும் அவசரத்தையும் அறியாதவன் ஒருவன் இருந்தான்.
அவன் பெயர் ஆதவன்.
ஆதவன் சிறுவயதில் பாட்டி சொல்லித் தந்த கதைகளை நினைவில் கொண்டிருந்தான்.
பாட்டி எப்போதும் சொல்வாள்:
“சோழர்கள் உலகமே கண்டு வியந்த பேரரசு. கரையில் இருந்து கடலை கடந்தவர்கள். எங்கள் வீரராஜேந்திரன் கடாரத்தைத் தாக்கி வென்றவன். அந்தக் கதை யாருக்கும் மறக்க முடியாது.”
சிறுவயது முதல் அந்தக் கதைகள் அவனது இரத்தத்தில் கலந்து விட்டன.
“நான் அந்தக் காலத்தில் பிறந்திருந்தால் என்ன செய்திருப்பேன்?”இந்தக் கேள்வி அவனது மனதில் எப்போதும் எரிந்து கொண்டிருந்தது.
அந்தக் கேள்விக்கான விடையைத் தேடும் ஆர்வமே அவனை விஞ்ஞானியாக ஆக்கியது.
IIT-யில் படிக்கும் போது அவன் Time Resonance Theory பற்றி ஆராய்ச்சி செய்தான்.
“நேரம் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு ஆறு மாதிரி. அந்த ஆற்றின் ஒவ்வொரு அலைக்கும் ஒரு நினைவு இருக்கிறது. அந்த அலையை
மீண்டும் அணுகினால் கடந்த காலத்தைப் பார்க்க முடியும்.”
அது தான் அவன் கொள்கை.
ஆனால் அந்த யோசனையை நண்பர்கள் கேலி செய்தார்கள்.
“ஏய், டைம் மெஷின் பண்ணப் போறியா? ஹாலிவுட் படம் மாதிரி?”
ஆதவன் சிரித்துக் கொண்டான். “நான் படம் எடுக்கல, வரலாறு காணப் போறேன்!”
எல்லோரும் விலகினார்கள். ஆனால் அவன் மட்டும் விலகவில்லை.
வயதானதும் அவன் சம்பளம் முழுவதும் ஆராய்ச்சிக்கே செலவழித்தான்.
அந்த நாள் மழை அடங்காத புயலாக மாறியது.
மின் விளக்குகள் அடிக்கடி மினுங்கின.
ஆய்வுக் கூடத்தில் அவன் மட்டும் தான் இருந்தான்.
மையத்தில் இருந்த கருவி – பெரிய வட்ட வடிவ காயில்கள், சுழலும் காந்த அலைகள், எலக்ட்ரோனிக் துகள்களின் சத்தம்.
கணினி திரைகளில் எண்கள் பாய்ந்தன.
அவன் சுவாசம் வேகமாயிற்று.
“இப்போ தான்… நான் எதிர்பார்த்த தருணம்.”
அவன் கைகளைச் சேர்த்துக் கொண்டான். பாட்டியின் சோழர் கதை அவன் காதில் ஒலித்தது போல இருந்தது.
“கடலின் புலிகள் வென்ற நாள்…”
அவன் ஸ்விட்சை அழுத்தினான்.
ஒளி மெல்ல விரிந்தது.
அது முதலில் ஒரு சிறிய புள்ளி. பின் ஒரு வட்டம்.
அது சுழன்று, சுழன்று – ஒரு கதவு போல மாறியது.
மின்னல் வெளியில் அடித்தது. ஆய்வுக் கூடத்தின் விளக்குகள் அணைந்தன.
ஆனால் கருவி நின்றுவிடவில்லை.
மாறாக, அதின் சக்தி அதிகரித்தது.
ஆதவன் ஓடி வந்து பவர் சுவிட்சை அணைக்க முயன்றான்.
ஆனால் ஒளியின் சுழல் அவனை விழுங்கியது.
அவனது உடல் எடையற்றது போல பறந்தது.
கண் முன் ஆயிரம் நிறங்கள்.
காதுகளில் இடியும் கர்ஜனையும்.
சுவாசம் தடுக்கப்பட்ட உணர்வு.
“இது மரணமா? கனவா? நான் எங்கே போறேன்?”
ஒரு கணத்தில் அனைத்தும் அமைதியாகிவிட்டது.
அவன் விழுந்தான்.
மண்வாசனை. புகை வாசனை. இரத்த வாசனை.
அவன் விழித்தபோது – கண்முன் போர்க்களம்!
ஆயிரக்கணக்கான வீரர்கள்.
கவசம் அணிந்து, வாள்கள் கையில்.
யானைகள் கத்தி, குதிரைகள் பாய்ந்து.
அம்புகள் வானில் பறந்தன.
“இது என்ன இடம்? படம் எடுக்கிறார்களா?” என்று முதலில் நினைத்தான்.
ஆனால் தரையில் விழுந்து கொண்டிருக்கும் காயமடைந்த வீரர்கள், அவர்களின் குரல்கள் – அனைத்தும் நிஜம் தான்.
தொலைவில் சிவப்பு கொடிகள் பறந்தன. அதில் புலி சின்னம்.
அவன் மனம் நடுங்கியது.
“சோழர் கொடி! … இது வீரராஜேந்திர சோழன் காலம்!”
அவன் மூச்சு திணறியது.
“2025ல இருந்த நான்… இப்போ 1068ல இருக்கேனே? இது சாத்தியமா?”
அவன் தன்னைத்தானே பிடித்துக்கொண்டான்.
“இது மரணத்தைச் சந்திக்கும் இடமா? இல்ல வரலாற்றைக் காணும் வாய்ப்பா?”
அவன் கண்கள் மயங்கின.
அவன் இன்னும் திகைத்துக்கொண்டிருந்தபோது, சில சோழப் படைவீரர்கள் அவனைப் பார்த்தார்கள்.
“ஏய்! இவன் யாரு? எங்கிருந்தும் தோன்றுகிறானே!”
ஒருவன் வாளை உயர்த்தினான்.
“கடாரக் கள்வனோ?”
ஆதவன் கைகளை உயர்த்தினான்.
“நான் சண்டைக்காரன் இல்லை! எங்கிருந்து வந்தேன்னு சொல்ல முடியாது…”
ஆனால் அவர்கள் அவனை நம்பவில்லை.
“இவன் யான்திர வித்தை கொண்டவன் போல இருக்கிறான். மன்னனிடம் அழைத்துச் செல்வோம்!”
அவ்வாறு, ஆதவன் சோழர்களின் பிடியில் சிக்கினான்.
வீரர்கள் அவனை இழுத்துச் செல்லும்போது, அவன் கண்கள் போரின் விரிவை உணர்ந்தன.
கடலருகே நடந்துகொண்டிருந்த போர்.
சோழப் படை – சிவப்பு கொடிகள்.
எதிரே கடாரப் படை – வேறு சின்னங்கள்.
கப்பல்கள், அம்புகள், இரத்தம்.
அவன் மனம் கத்தினது:
“இது தான் வரலாறு! நான் இதையே காண விரும்பினேன். ஆனால் இப்போ நான் உயிரோடு தப்புவேனா?”
அவனது உள்ளத்தில் அச்சமும் வியப்பும் கலந்திருந்தது.
0 Comments